மாவீரர் தினத்தை அனுஷ்டித்த தேசிய மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நபர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுல ரத்நாயக்க நேற்று (05) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
தடைசெய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவீரர் தின நிகழ்வுகள் வெளிநாடுகளில் இடம்பெற்றிருக்குமாக இருந்தால் அந்த நபர்களை கைதுசெய்வதற்காக சிவப்பு பிடியாணையை பெற்றுக்கொள்ளுமாறும் மேலதிக நீதவான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு மேலும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாவீரர் தினத்தை ஏற்பாடு செய்த மற்றும் அதனை அனுஷ்டித்த நபர்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து அவர்களை கைதுசெய்வதற்கு இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றபுலனாய்வு திணைக்களத்தை கடுமையாக சாடிய மேலதிக நீதவான் தகவல் வழங்கியவர்கள் கூறும் விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவீரர் தின நிகழ்வுகளுடன் தொடர்புடைய காணொளிக் காட்சி, புகைப்படத்தை தயாரித்த மற்றும் அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபர்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்காமல் சம்பந்தப்பட்ட காணொளி, புகைப்படத்தை சமூக வலைத்தளங்களினூடாக பகிர்ந்துகொண்ட நபர்களை கைதுசெய்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோருகின்றமை எந்தளவு தூரம் நியாயமானது என்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் வினவிய மேலதிக நீதவான், இது தகவல் வழங்குனர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்வதற்கு ஈடான செயற்பாடாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பிரபல்யப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் தினம் தொடர்பில் போலி தகவல்களுடனான காணொளிக் காட்சிகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவம் கொண்ட புகைப்படம் சமூக வளைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாக குறிப்பிட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் அதிகாரிகளினால் நேற்று(05) கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேராவை 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டு மேலதிக நீதவானால் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுல ரத்நாயக்கவின் உத்தியோகப்பூர்வ அறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த முறைப்பாடு தொடர்பான விடயங்கள் குற்றப்புலனாய்வு விசாரணைத் திணைக்களத்தின் அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்டிருந்தது. இதன்போது அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற மாவீரர் அனுஷ்டிப்பு நிகழ்வுகளுடன் தொடர்புடைய காணொளிக் காட்சிகள், பேஸ்புக்கினூடாக பகிர்ந்துகொண்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைதுசெய்ததாக அறிவித்திருந்தனர்.
குறித்த மாவீரர் தின நிகழ்வு வடக்கில் இடம்பெற்றது போன்று புலப்படும் வகையில் அந்தப் பதிவு இடப்பட்டிருந்ததாக குறிப்பிட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அவ்வாறானதொரு நிகழ்வு வடக்கில் இடம்பெற்றிருக்கவில்லை என்றும் சந்தேகநபர்களின் நடவடிக்கைகள் இனங்களுக்கிடையே சமூகமற்ற நிலைமையை உருவாக்குவதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விசாரணைகளுடன் தொடர்புடைய பல்வேறு வாக்குமூலங்கள் பதிவு செய்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதால் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கோரியுள்ளனர்.
சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணிகளான மனோஜ் கமகே, பிரேமநாத் சீ. தொலவத்த, ரகித அபேகுணவர்தன, பசங்க ஹரிஷ்சந்ர, ஷாபிதிக வெல்லப்புலி, பத்மபிரிய ரணவக, அநுராத செனவிரத்னவுடன் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி எண்டன் சேனாயக்க நீண்ட கருத்துகளை முன்வைத்து கீழ்வருமாறு கூறியுள்ளார்.
இந்த காணொளி காட்சி மற்றும் புகைப்படம் சந்தேகநபர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல. அவை ஹஷினி என்பவரினால் சந்தேகநபர்களின் பேஸ்புக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டவையாகும். எல்.ரி.ரி.ஈ. அமைப்பை பிரசித்தப்படுத்துவதற்கு சந்தேகநபர்களால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எல்.ரி.ரி.ஈ. நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தாலும் அவற்றை ஒழுங்கமைத்த நபர்களை கைதுசெய்வதற்கு பொலிஸார் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை.
வடக்கில் மாவீரர் தின நிகழ்வு இடம்பெற்றதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரினால் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. 224 மாவீரர் தின நிகழ்வுகள் மற்றும் 10 எல்.ரி.ரி.ஈ. கொடிகளை காட்சிப்படுத்திய சம்பவங்களும் பதிவாகியிருந்ததாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரினாலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் மாவீரர் தின நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அப்படியொரு நிகழ்வு இடம்பெறவில்லை என்று குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தின் முன்னிலையில் கூறிய கருத்து பிரச்சினைக்குரியதாகும். சந்தேகநபர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பயங்கரவாத தடைச்சட்டத்துடன் தொடர்புபடாது. அதன் காரணமாக சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு” கோரினார்.
சட்டத்தரணி மனோஜ் கமகே:
எல்.ரி.ரி.ஈ. தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். இதுவரையில் அவரை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலதிக நீதவான்:
இதனுடன் தொடர்புடைய சர்ச்சைக்குரிய காணொளிக் காட்சி உள்ளடக்கிய காணொளியை உருவாக்கிய நபர்கள் மற்றும் அவற்றை வெளியிட்ட நபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா?
குற்றப்புலனாய்வுத் திணைக்களம்:
அப்படியொரு விசாரணையை முன்னெடுக்கவில்லை. முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலனை செய்த நீதவான் சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார். இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். (thamilan.lk)